மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி தான்

 

 

மக்களின் அன்றாட வாழ்வில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை மறந்து மகிழ்ச்சியாக இருக்க பெரும்பான்மையான மக்கள் விரும்புவது திரைபடம் பார்ப்பதைத் தான். மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி தான்

.

சிறந்த போட்டோகிராபி இயக்குனருக்கான தகுதிகள்:

 

ஒரு திரைப்படத்தின் காட்சி அமைப்பு சிந்தனை, நல்ல தொழில் நுட்பம், நெருக்கடியான தருணத்தில் நிதானம் இழக்காமல் இருத்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன் போன்றவை ஒரு சினிமட்டோபிராபி இயக்குனருக்கு முக்கிய தகுதிகள் ஆகும். ஆரம்ப நாட்களில் இந்த போட்டோகிராபி தொழிலானது ஒரு நபர் பணியாக இருந்தது. போட்டோகிராபி டைரக்டரே இயக்குனராகவும் இருப்பார். ஆனால் இன்றைய காலத்தில் போட்டோகிராபி இயக்குனரின் பணி மிகவும் நிபுணத்துவம் மற்றும் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக பரிணாமம் அடைந்துள்ளது. ஒரு நல்ல போட்டோகிராபி இயக்குனர், ஒரு படத்திற்கான சொத்தாக மதிக்கப்படுகிறார். படத்தில் பார்க்கும் அனைத்து விஷயங்களையும் அழகாக காட்டும் பெரும் பொறுப்பு அவருடையது.

 

இத்துறைக்கான படிப்பு மற்றும் கல்லூரிகள்:

 

ஒரு நல்ல போட்டோகிராபி இயக்குனராக உருவாக படிப்பை விட ஆசிரியரே முக்கிய தூண்டுகோலாக இருப்பார். சினிமாட்டோகிராபி தொடர்பான கல்வியை திரைப்பட கல்லூரியில் படிக்கலாம். இந்தியாவை பொறுத்தவரை இப்படிப்பு 2 முதல் 3 வருட டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகிறது. புனேவில் உள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தாவில் உள்ள சத்யஜித்ரே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் போன்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. இது தவிர விஸ்லிங் உட்ஸ் திரைப்பட கல்வி நிறுவனத்தில் பள்ளி படிப்பை முடித்த பிறகு 2 வருட படிப்பை மேற்கொள்ளலாம்.

திரைப்பட கல்லூரிகளில் பயிற்சி என்பது தியரி மற்றும் பிராக்டிஸ் ஆகியவை சேர்ந்ததாக இருக்கும். மேலும் கல்லூரிக்கு வெளியில் தனியாக பல ப்ராஜெக்ட்கள் செய்ய வே ண்டியிருக்கும். இந்த படிப்பானது கேமராக்களை வைத்து செயல் முறை கற்றல் மூலம் வழங்கப்படுகிறது.

 

கலைநயத்தை கற்றல்:

 

இப்படிப்பில் முதல்வருடம் பொது அடிப்படை படிப்பாக இருக்கும். இதில் டைரக்ஷன், எடிட்டிங், ஒலி, ப்ரொடக்ஷன், கேமரா, ஆர்ட் டிசைன் உள்ளிட்ட சினிமா தொடர்பான அனைத்து அடிப்படை அம்சங்களும் கற்றுத்தரப்படும். இதில் ஒரு நாளில் முதல் பாதி தியரி வகுப்புகளும், பிற்பாதி செயல் முறை விளக்கத்திற்கும் ஒதுக்கப்படும். மாலை வேளையில் திரைப்படங்கள் திரையிடப்படும். அடுத்த ஆண்டில் நடைமுறை பயிற்சிக்கு அதிக நேரம் செலவிடப்படுகிறது. இதில் குறும்படங்கள், மியூசிக் வீடியோ மற்றும் டாகுமென்டரி போன்றவைகளை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சிக்காக பல வீடியோக்களை மாணவர்கள் தயாரிக்க வைக்கப்படுகிறார்கள். இதன் மூலம் படிப்பை முடித்து வரும் மாணவர்கள் இத் துறையில் சிறந்து விளங்க முடியும்.

பயிற்சியின் தன்மை:

இப்படிப்பை கற்றலின் போது மாணவர்கள் ஒரு குழுவாக பயிற்சி பெற வைக்கப்படுகிறார்கள். குழுவாக பணியாற்றும் போது அதில் மாணவர்கள் சிறந்த அனுபவத்தை பெறமுடியும். இது போன்ற பயிற்சியில் ஒருவரின் சுய சாதனையைவிட ஒரு குழுவின் சாதனை பெரியதாக தோன்றும். இதில் ஒவ்வொருவரின் தனித்திறமையை அறிந்து கொள்ள வாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் மகத்துவம் வெளிப்படும். மேலும் ஒரு கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் மனப்பாங்கு திரைப்பட கல்லூரியில் வளர்த்தெடுக்கப்படுகிறது. இத்துறையில் தனிமனிதன் என்ற முறையில் உங்கள் சுதந்திரத்திற்கு மதிப்பு உண்டு.

 

இத்துறைக்கேற்ற மாறுபட்ட படிப்பு:

 

சினிமாட்டோகிராபி துறையில் பயிற்சி பெற திரைப்பட கல்லூரிதான் ஒரே இடம் என்பதல்ல. மீடியா தொடர்பான விரிவான அம்சங்களை கொண்ட மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளும், சிறந்த சினிமாட்டோ இயக்குனர்களை உருவாக்கும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு பல விதமான கேமரா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் செய்தி அல்லது டாகுமென்டரி கேமரா நிபுணராக பரிணமிக்கும் பயிற்சி உங்களுக்கு கிடைக்கிறது. மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகள் சினிமாட்டோ இயக்குனர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய படிப்புகளில் திரைப்பட கல்லூரிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டங்களின் சிறியளவு மாடல்கள் பின்பற்றப்படுகிறது.

 

பணி வாய்ப்புகள்:

 

படித்து முடித்ததும் விரைவாக பணம் சம்பாதிக்கும் நபர்களில் சினிமாட்டோகிராபர்கள் முக்கியமானவர்கள். புகழ்பெற்ற சினிமாட்டோகிராபர்கள் ஹீரோக்கள் மற்றும் தலைசிறந்த இயக்குனர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் இத்துறையில் வெற்றியடைவது மிகவும் எளிதான ஒன்று அல்ல. இத்துறையை பொறுத்தவரை தொழில்நுட்ப அறிவுடன் பொறுமையும் மிக அவசியம். இதில் அதிர்ஷ்டமும் துணை நிற்க வேண்டும்.

 

ஆரம்ப காலத்தில் பல சிக்கல்களையும், தடைகளையும் கடக்க வேண்டியிருக்கும். அதை முடித்துவிட்டால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கும். இத்துறையில் டாகுமெண்டரி படத்திற்கு சில ஆயிரங்களும், முதல் படத்திற்கு சில லட்சங்களும் ஊதியம் பெறலாம். ஆனால் அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் கோடிகள் வரை 

இத்துறையில் ஊதியமாக பெற சாத்தியங்கள் உண்டு.