தொழிலாளர்களின் உரிமைகளை பேசுவதால் மட்டும் பயனில்லை!

Image result for what is may day

ஆண்டு தோறும் ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டு வரும் தொழிலாளர் தினமான மேதினம் இவ்வாண்டும் ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டு நிறைவெய்தியுள்ளது. மே முதலாம் திகதி கொண்டாடப்பட வேண்டிய தினம் சமய விழாவிற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தால் ஒருவாரம் பின்தள்ளப்பட்டது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினராலும் கோலாகலமாக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மேடை முழக்கங்களென்று பல நிகழ்வுகளுடன் இத்தினம் கொண்டாடப்பட்டது. நாட்டிலே உழைக்கும் தொழிலாளரின் பெருமையை எடுத்துக்காட்டும் இத்தினத்தின் முக்கியத்துவத்தை நிகழ்வுகள் நடத்துவதுடன் மாத்திரம் நிறுத்திவிடக் கூடாது.

தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உழைப்பின் பெருமையை உணர்ந்ததால் உழைப்பாளர் தினமாகத் தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். உழைப்பாளிகளின் தினத்தைக் கொண்டாடும் பாரம்பரியத்தின் உரித்தானிகளாக தமிழர்கள் விளங்குகின்றனர். விவசாயமே பண்டைய உலகில் பாரம்பரிய தொழிலாக இருந்தது. காலப்போக்கிலேற்பட்ட கைத்தொழில் புரட்சியின் மூலம் வேறுபல தொழிற்றுறைகளும் முன்னிலை பெற்றன.

அதன் பின்னணியில் தொழில் வழங்குவோர், தொழில் ஆற்றுவோர் என்ற இரு பிரிவினர் சமுதாயத்தில் உருவாகினர். அவர்களே முதலாளிகள் என்றும் தொழிலாளர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு பிரிவுபட்டதன் மூலம் அது வர்க்கங்களென்றும் கூறப்பட்டது. முதலாளி வர்க்கம், தொழிலாளர் வர்க்கம் எனக் கூறப்பட்டது.

 

Image result for what is may day

முதலாளிகள் தமது இலாபத்தை நோக்காகக் கொண்டவர்களாகவும், தொழிலாளிகள் அவர்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பவர்களாகவும் காணப்பட்டனர். பாடுபட்டு உழைக்கும் தொழிலாளருக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் வேலை நேர அளவு, ஏனைய அடிப்படை வசதிகள் என்பன வரையறுக்கப்பட வேண்டுமென்ற சிந்தனை தொழிலாளர் மத்தியிலே ஏற்பட்டது. இதுவே தொழிலாளர் புரட்சியாக உருவெடுத்தது.

தொழிலாளர்களும் மனிதர்களேயாவர். அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் உண்டு, உடுத்து உரியபடி வாழவேண்டும் என்ற நியாயமான சிந்தனையின் தாக்கத்தால் தமக்குரிய உரிமைகளைப் போராடியாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தொழிலாளர்களின் போராட்டத்தால் ஏற்பட்ட நினைவு தினமே மேதினமாகும். முதலில் அமெரிக்காவில் நிகழ்ந்த போராட்டத்தால் பலர் தங்களது உயிர்களையும் இழந்தனர். இந்நிகழ்வானது தொழிலாளர்களின் தியாகத் திருநாளாக அமைகின்றது.

இதன் பின்னணியில் உருவானவையே தொழிற்சங்கங்கள். ஒவ்வொரு தொழில்துறைக்கும் ஒரு தொழிற்சங்கமொன்று உருவாகி இன்று ஒரு தொழில் துறைக்குப் பல சங்கங்களென்று உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கும் மேலாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமக்குச் சார்பாக ஒவ்வொரு தொழிற்றுறையிலும் சங்கங்களமைத்துள்ளன. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், உரிமையைப் பெறவும் உறுதிப்படுத்தவும் இணைந்து போராடுங்கள் என்பதெல்லாம் கனவாகக் கலைந்து போய்விட்டன என்றும் கூறலாம்.

எவ்வாறிருந்த போதிலும் நமது நாட்டின் தொழிற் சட்டத்தின்படி ஏழு பேர் இணைந்து ஒரு தொழிற்சங்கம் அமைக்க முடியும். அதனடிப்படையில் நாட்டில் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தொழிற்சங்கங்களில் பெரும்பான்மையானவை அரசியல் கட்சிகளின் சார்பானவையாகவே காணப்படுகின்றன. அதாவது அரசியல் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

எந்தவொரு தொழிற்சங்கத்திற்கும், அவற்றின் நிர்வாகிகள், தலைவர்களுக்கு குறித்த தொழில்துறை சார்ந்த சட்டங்கள் பற்றிய அறிவு உண்டா என்று எவரும் கவனிப்பதில்லை. ஆவேசப் பேச்சுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

நமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றிலும் பல உட்பிரிவுகள் தரத்திற்கேற்ப வேறுபடுகின்றன. அரசுத்துறைசார் தொழிலாளர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து மாதாந்த ஊதியம் பெறுபவர்களாவர்.

அடுத்து துறையாகத் தனியார் துறையினர் உள்ளனர். பெருந்தோட்டத்துறையில் நாட்கூலிக்கு வேலை செய்வோர், சுயதொழில் செய்வோர் மற்றும் விவசாயம், மீன்பிடி தொழில்களில் ஈடுபடுவோரும் உள்ளனர்.

எதுஎவ்வாறிருந்த போதிலும் நமது நாட்டில் தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்கங்களும், அவற்றினை நிர்வகிப்பவர்களும் குறித்த தொழிற்சங்கம் சார்ந்த தொழில் சட்டங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசுத்துறைக்கான தனியான தொழில் விதிமுறைகளுள்ளன.

தனியார் துறையைப் பொறுத்தவரை சம்பள சபைகள் கட்டளைச் சட்டம், கடை அலுவலக ஊழியர் சட்டம், ஊழியர் சேமலாபநிதிச் சட்டம், ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம், பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டம், மகப்பேற்று நலன்கள் கட்டடத் தொழிலாளர் நட்டஈடு கட்டளைச் சட்டம். தொழில் பிணக்குகள் சட்டம், தொழிலாளர்கள் கட்டளைச்சட்டம், பெண்கள், இளைஞர், சிறுவர்களை வேலைகளில் ஈடுபடுத்தும் சட்டம் என்று பல்வேறு சட்டங்கள் என்பன உள்ளன. இவை அனைத்தும் தொழில் வழங்குவோர், தொழில் ஆற்றுவோர் ஆகிய இரு பகுதியின் மத்தியில் சுமுகமான சூழ்நிலையையும், இசைக்கப்பாட்டையும் ஏற்படுத்தி அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கிலானவை.

தொழிற்கள சுமுகத் தன்மையைப் பேணி தொழிலாளர் நலனுக்கு உத்தரவாதம் வழங்கும் சட்டவிதிகளைத் தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டுமல்ல, துறைசார் தொழிலாளர்களும் தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளதாகும்.அது மட்டுமல்ல அவசியமானதும் கூட. தொழிலாளர் உரிமை பற்றிப் பேசுவதால் மட்டும் பயனில்லை. அவர்களது உரிமைகளைப் பேண ஆக்கப்பட்ட சட்டவிதிகள் தொடர்பாகவும் அறிவுறுத்தப்படல்வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

thanks thinakaran