தாண்டிச் செல்ல வேண்டிய சோதனைகள்

உலக வாழ்க்கையில் எல்லாருமே சோதனைகளை கடந்து செல்ல வேண்டியதுள்ளது. அதை கடந்து செல்லும்போதுதான், தேவையற்றதை அல்லது தீமையானதை அல்லது கவர்ச்சியானதை தவிர்ப்பதில் நமக் கிருக்கும் பலத்தைப் பற்றி அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும். அதோடு, வந்திருக்கும் அந்த சோதனை நமது ஆசையினால் வந்ததா? அல்லது எந்த வகையிலானதா? என்பதையும் அறிய முடியும்.
 
சற்று ஆராய்ந்து பார்த்தால், மூன்று வகையான சோதனைகளை எல்லாருமே கடந்து செல்வதை உணர முடியும். மனிதன் என்பவன் ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்று அம்சங்களின் ஒருங்கிணைப்பு என்பதால், சரீரம், உள்ளம், பிறவிக்குணங்கள் ஆகிய மூன்றிலும் ஏற்படும் சோதனைக்கு உட்பட வேண்டியதுள்ளது.
 
சரீரத்தை ஆட்கொள்வதற்காக பல பாவங்கள் உலகமெங்கும் சோதனையாக வைக்கப்பட்டுள்ளன. இதில் மது உட்பட பல வஸ்துக்களை பட்டியலிடலாம். ஒருவனது வாழ்க்கையில் நுழைவதற்கான நெருக்கடியை உருவாக்கும் சோதனையாக இவையெல்லாம் உள்ளன. ஒருவனின் வாழ்க்கையில் நுழைந்துவிட்ட பிறகு அவனது சரீரத்தை படிப்படியாக அடிமைப்படுத்திக் கொள்கின்றன.
 
 
உள்ளம் என்பது வெளியே தெரியாது என்பதால் அங்கு நடத்தப்படும் பாவங்கள் அனேகம். கொலைகூட அங்கு நடந்திருக்கும். உள்ளத்தில் இச்சை, பெருமை, பொறாமை போன்றவை இருந்தால், அவை தொடர்பான சோதனைகளில் விழும் நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது.
 
ஜென்ம சுபாவம் என்ற பிறவிக்குணங்களின் ஆளுகைதான் பெரும்பாலும் இயல்பான வாழ்க்கையின் அடித்தளமாக உள்ளன. இகழ்ந்தோரை இகழ்தல், பகைத்தோரை பழிவாங்குதல், தனது கொள்கையை சாராதவரை பகைத்தல் என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அந்த சுபாவங்கள் இருந்தால் அதற்கான சோதனையில் வீழ்ந்துவிடுவதும் இயல்பே.